• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தியானம் பற்றி புரிந்து கொள்ளவேன்டியவை

ஜோதிடம்

எது தியானம் என்பதில் வேண்டிய அளவு குழப்பம் தற்போது நிலவுகிறது.... 
இதற்கு முக்கியக் காரணம் வெறும்  மன ஒருமைப்பாட்டை தியானம் என்று நினைப்பதுதான். 
எந்த மனிதனாலும் சரி அவனால்  தன் மனத்தை ஏதாவது ஒரு  பொருளில் நிலை நிறுத்த முடியும்.இந்த நம்பிக்கையில் தான் பலர் தியானம் செய்யவும் முயல்கின்றனர். 
ஆனால் தோல்வி மேல் தோல்வி வரும் போது  ” என்னால் ஏன் தியானம் செய்ய முடியவில்லை? என்று கேட்கின்றனர். 
உண்மை என்னவென்றால் வெறும் மன ஒருமைப்பாடு அதாவது மனத்தை ஏதாவது ஒரு  பொருளில் நிலை நிறுத்துவது தியானம் ஆகாது. 
அடுத்து மன ஒருமைப்பாட்டிற்கும் தியானத்திற்கும் இடையிலுள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன என்று பார்ப்போம். 
மனத்தை ஏதாவது ஒரு புறப்பொருளில் குவிப்பது மன ஒருமைப்பாடு. ......
மனத்தின் உண்மையான பிறப்பிடம் அல்லது மையத்தில் குவிப்பது தியானம்....‌‌
ஏதாவது ஒரு பொருளில் அல்லது மனத்தைக் குவிப்பது மன ஒருமைப்பாடு. இது நமக்கு தெரியாத ஒன்றல்ல. 
சிறு வயதிலிருந்தே நாம் ஏதாவது ஒரு விதத்தில்  ஏதாவது ஒன்றில் மனத்தை ஒருமைப்படுத்தியே வருகிறோம். 
கதைப் புத்தகங்களைப் படிக்கும் போதும், திரைப்படத்தைப் பார்க்கும் போதும் பாடல்களை கேட்கும் போதும் நமது மனம் ஒருமைப்படுகிறது. 
கருத்தூன்றி ஒரு வேலையைச் செய்யும் போது சில வேளைகளில்  நாம் சூழ்நிலையைக்கூட மறந்துவிடுகிறோம். 
எனவே புறப்பொருட்களில்  மனத்தை நிலைநிறுத்துவது சாதாரணமான விஷயம் தான். 
புறப்பொருட்களில் மனத்தை நிலை நிறுத்துவது கடினமான காரியமல்ல...... உண்மையான தியானம் அனுபவம்
இதற்கு நேர்மாறாக இருக்கும்..
அதாவது வெளிமுகமாக ஓடும்  மனத்தை உள்முகமாக்கி அதன் பிறப்பிடத்தை  நாடச் செய்வதே தியானம்...
இயல்பாகவே புறத்தில் பாய்ந்தோடும் மனத்தைத் திருப்பி உள்முகமாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏன்? 
ஏனெனில் மனத்தைத் திருப்பி உள்ளே எந்த இடத்தில் ஒருமைப்படுத்த வேண்டுமோ, அந்த இடம்  அல்லது அந்த மையம் இன்னும் நம்முள்  உருவாகவில்லை. அந்த மையம் தான்  இதயக்கமலம்.. அல்லது இதயத்தாமரை. 
இது பலருக்குப் புதிராக இருக்கலாம். லப், டப், என்று துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை நாம்  ஒவ்வொருவரும் அறிவோம்.ஆனால் நாம் இங்கே குறிப்பிடும் இதயம் என்பது வேறு...
இதயம் என்பது பரிபாஷை..‌‌
இரு+உதயம்=இதயம்....இது இருதயம்..
என்று தமிழ் வழக்கில் உள்ளது...

நாம் தியானிக்க  வேண்டியது ஆன்மீக இதயத்தில்  அல்லது இதயத்தாமரையில். அங்கு மட்டுமே உண்மையாக தியானிக்க முடியும். பலரில் இந்த ஆன்மீக இதயம்  மலரவில்லை 
அதற்கு ஜபம், பிராத்தனை, பிரம்மச்சரியம் போன்ற பயிற்சிகள் தேவை. 
 இந்த ஆன்மீக மையத்தை அதாவது இதயத் தாமரையை கண்டுபிடிக்கும் வரையில் தியான வேளையில்  அவனது மனம்  அலைந்து கொண்டு தான் இருக்கும். 
அவனைப்பொறுத்தவரையில் தியானம் என்பது வெறும் மனப்போராட்டமாகவே இருக்கும். 
இதில் இன்னும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். மனத்தை உள்முகமாகத் திருப்பி அதன்  பிறப்பிடத்தில்  நிலைநிறுத்துவது தியானம் என்று கண்டோம். 
இதன் பொருள் , தறிகெட்டு அங்குமிங்குமாக ஓடும் மனத்தை அதன் பிறப்பிடத்திற்கு உந்தித் தள்ளுவது அல்ல தியானம்,
 மாறாக உள்ளிருந்து ஏதோ ஒன்றால் இழுக்கப்பட்டு இயல்பாகவே மனம் உள்முகமாவது தான் தியானம். 
அதாவது காந்தம் இரும்புத்துண்டை கவர்வதுபோல மனம் உள்முகமாக 
கவரப்பட வேண்டும்
இது நடக்க வேண்டுமானால் இதயத்தாமரை மலர்ந்திருக்க வேண்டும். அப்போது தான் தியானம் இயல்பாக நடைபெற முடியும். 
தியானத்திற்கு முந்தைய படியான தாரணையில் வெற்றி பெறாமல் தியானத்தில் வெற்றிபெற முடியாது
ஓய்வெடுப்பதற்காகத் தனது சொந்தக் கூட்டை அடைகின்ற பறவையைப்போல் மனமும் தனது பிறப்பிடத்தை அடைகின்ற  இந்த ஓய்வு நிலை  அல்லது மனத்தின் ஒருமுக நிலையே தாரணை. 
தாரணை இன்றி தியானம் செய்ய முடியாது. 
பிராத்தனை, ஜபம், பிரம்மச்சரியம் போன்ற  சாதனைகளால் இதயத்தாமரையை மலரச் செய்த பின்  மனம் அங்கே இயல்பாகக் குவிகின்ற நிலை தியானம்.
மன ஒருமைப்பாட்டிற்கும் தியானத்திற்கும் உள்ள ஒரு வித்தியாசம் என்வென்றால்
 மன ஒருமைப்பாட்டில் எல்லாப்பொறிகளும்  இயங்குகின்றன. தியானவேளையில் பிற பொறிகள் எல்லாம் அடக்கப்பட்டு மனம் மடடுமே இயங்குகிறது.
மன ஒருமைப்பாட்டில் பார்வை போன்ற பொறிகள் அடக்கப்படாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன. புற உலகத்துடன் அவற்றின் தொடர்பு துண்டிக்கப்படவில்லை. 
தியானத்தின் போது மனம் மட்டுமே செயல்படுகிறது. பார்த்தல்,கேட்டல்,நுகர்தல் போன்றவை முற்றிலுமாக அடங்கி இருக்கும்
புற உலகத்துடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கும் 
தியானம் செய்வதற்கு முன்னால் தாரணையிலும்   பிரத்யாஹாரத்திலும் (மனத்தைப்பிற உலகினின்று பிரித்தல்) ஒருவன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 

(சிவசம்போ)
 

Leave a Reply