• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வைரமுத்து சிறுகதைகள்

சினிமா

”வைரமுத்து சிறுகதைகள்“ எனும் இப்புத்தகத்தை வாங்கவேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணிக்கொண்டிருக்கையில் அதையறிந்து எனது மாணவன் இன்னகோன் என்பவர் இப்புத்தகத்தை வாங்கி எனக்கு அன்பளிப்பு செய்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

மாலைப்பொழுதை மகிழ்ச்சிப் பொழுதாக மாற்றுவது அரட்டைகள். மனிதர்களோடு அரட்டை செய்யும்போது நிச்சயமாக இன்னொருவரின் வாழ்க்கையைப் பற்றியும் பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவரது வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களை விமர்சிக்கவும் செய்வோம். நாம் அவருக்கு சார்பாக நல்லதாக பேசினாலும் பிறகு அவரது காதுக்கு அது திரிபடைந்து மோசமாக சென்றடையவும் வாய்ப்புகள் உண்டு. எனவே மனிதர்களோடு அரட்டை செய்வதிலும் பார்க்க புத்தகங்களோடு அதுவும் கதைப்புத்தகங்களோடு அரட்டையடிப்பதனால் எந்தவித தீமையும் ஏற்படாது.

கதைப்புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களையும் அவற்றின் வாழ்க்கையையும் பற்றி பிறரோடு கலந்துரையாடினாலும் தப்பேதும் நிகழப்போவதில்லை.

சிறந்த கதைப்புத்தகங்களே சிறந்த கதாபாத்திரங்களை  ஈன்றெடுக்கும். அவ்வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கதைகளில் பிறப்பெடுத்திருக்கும் கதாபாத்திரங்கள் யாவும் உலகெங்கும் போற்றப்படுகின்றன. அவை எம் மனதில் குடிகொள்கின்றன. நண்பர்களோடும் வேறு புத்தகப் பிரியர்களோடும் உரையாடும்போது உதாரணங்களாக எடுத்துக்காட்டுவதற்கு உதவி செய்கின்றன.
“வைரமுத்து சிறுகதைகள்“ எனும் இந்நூலிலும் வித்தியாசம் வித்தியாசமான பல கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரகம். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு உணர்வுகள் ஓங்கியெழுந்துள்ளன. அக்கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்குள் நான் ஊடுறுவுகையில் ஒருவித படிப்பினையை  பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கின்றது. வாழ்க்கை என்றால் என்ன? என்பதை ஓரளவு புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கதாபாத்திரங்களின் வாழ்வை எடுத்துக்காட்டி பிறருக்கு அறிவுரை வழங்கக்கூடியதாக உள்ளது.

கவிஞர் வைரமுத்து அவர்கள் இப்புத்தகத்தினூடாக வனம், கிராமம், நகரம், அரண்மனை, வீடு, குடிசை என பல்வேறு சூழல்களுக்கு எம்மை அழைத்துச்சென்று அங்குள்ளவர்களுடன் எம்மையும் சில நிமிடங்கள் வாழச்செய்கின்றார். அவர்களின் மனங்களை புரிந்துகொள்ளச் செய்வதினூடாக எம்மைச் சுற்றி வாழும் மனிதர்களின் மனநிலையையும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.
இந்நூல் எழுத்து மூலம் எழுந்த ஓர் உலகம்.

மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களை உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டும் சிறிய போதிமரம்.

ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது என் மனதினுள் அனலும் - ஆனந்தமும், சோகமும் - சொர்க்கமும், வியப்பும் - வீரமும், உவகையும் - உளைச்சலும் என பல உணர்வுகள் மாறி மாறி உருவாகிக்கொண்டே இருந்தன.

இப்புத்தகத்தின் பக்கங்களில் ஆழ்ந்து, கதைகளின் உணர்வுகளை அனுபவித்து வாசித்தேன். முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரையுள்ள அனைத்து கதைகளிலும் காணப்படுகின்ற ஒவ்வொரு வரியிலும் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் தவறவிடாமல் என் விழிகள் முத்தமிட்டன.
தற்போது மீண்டும் முத்தமிடப்போகின்றன.

நன்றி
சித்திரவேல் அழகேஸ்வரன்

Leave a Reply