சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடமிருந்து 3000 புதிய பேருந்துகளைக் கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடுகின்றது. இதனை எதிர்த்து சிறிலங்காவிலுள்ள தனியார் பேருந்து இயக்குனர்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் பேருந்துக் கொள்வனவு தொடர்பில் சீனாவுடன் பேச்சுக்களை நடாத்திவருவதாக, சிறிலங்கா போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
"இந்தப் பேருந்துகளைக் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம். ஆனால் இன்னமும் இது தொடர்பில் சீன நிறுவனத்துடன் பேச்சுக்களை மேற்கொள்கிறோம். இது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை" எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்துத் துறையில் காணப்படும் தேவையைக் கருத்திற் கொண்டு சீனாவிடமிருந்து பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
தற்போது சிறிலங்கா அரசுக்குச் சொந்தமாக 5000 பேருந்துகள் காணப்படுவதாகவும் இவற்றுள் 3500ற்கும் மேற்பட்ட பேருந்துகள் 15 ஆண்டுகாலப் பழமை வாய்ந்ததால் இவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் வெல்கம தெரிவித்துள்ளார்.
இதனாலேயே சிறிலங்கா அரசாங்கமானது தற்போதைய வீதி தரத்துக்கு ஏற்ற பேருந்துகளை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்வது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிடமிருந்து புதிய பேருந்துகளைக் கொள்வனவு செய்வதால், நாட்டிலுள்ள தனியார் போக்குவரத்து துறை பெரும் பாதிப்பைச் சந்திப்பதாகவும், இதன் மூலம் நாட்டில் பொதுப் போக்குவரத்து துறையை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாகவும் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிகம் காணப்படுகின்ற நிலையில், தனியார் பேருந்து இயக்குனர்கள் பயணிகள் பேருந்து சேவையில் பெரும்பாலான அதிகாரத்தைக் கொண்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.