இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மீளாய்வு இந்த வருட இறுதியில் ஜெனீவாவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதான கலந்துரையாடலராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் காத்திரமான திட்டத்தை அந்த கூட்டமைப்பு கொண்டுள்ளமையால் இலங்கை அரசாங்கம் அந்த கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவேண்டும் என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இணக்கமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை சர்வதேசத்துக்கு காட்ட முடியும் என்று இந்தியா, இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புதுடில்லியில் வைத்து சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உரிய வரைபு ஒன்றை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று மன்மோகன்சிங் கேட்டுள்ளார்
இது அனைத்து தரப்புக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தமிழ்த்தேசியக்கூட்;டமைப்புடன் தீவிரமான பேச்சுக்களி;ல் ஈடுபடவேண்டும் என்றும் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
மன்மோகன்சிங்கின் வலியுறுத்தலுக்கு பதிலளித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இனப்பிரச்சினை தீர்வுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ள போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் அதில் இன்னும் பங்கேற்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்
இந்தநிலையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அனைத்து கட்சியினருடனும் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று தெ ஹிந்து குறிப்பிட்டுள்ளது