இலங்கையுடன் இந்தியா மேற்கொண்ட கச்சதீவு ஒப்பந்தத்தைச் செல்லாது என அறிவிக்க கோரி 2008-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் விபரம்:1880-களில் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஆவணங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
இதை வைத்துப் பார்க்கும்போது, 1974-76-ம் ஆண்டுகளில் கச்சதீவை இலங்கைக்கு கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாகும்.
இந்தியக் கப்பல்கள் இலங்கை பகுதியிலும் இலங்கைக் கப்பல்கள் இந்தியப் பகுதியிலும் பாரம்பரியமாக மீன் பிடித்து வந்த உரிமை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இலங்கைக் கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமை இல்லை என மத்திய அரசு தன்னிச்சையான நிலையை எடுத்துள்ளது.
இலங்கைக் கடற்படை நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 72 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காணாமல் போய் உள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க இந்தியாவின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீண்டும் பெற வேண்டும்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மறுவரைவு செய்ய வேண்டும்.
எனவே, கச்சத் தீவு தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள மனுவை உடனடியாக நீதிமன்றம் விசாரித்து மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.