கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுக்கடுக்கான பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சர் பதவிகள், கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று, மத்திய அரசில் ஒரு அமைச்சர் பதவி மற்றும் ஒரு பிரதி அமைச்சர் பதவி, அல்லது மூன்று பிரதி அமைச்சர் பதவிகள் ஆகியவற்றைத் தருமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பிர்கள் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நேற்றைய கூட்டத்திலேயே இதுபற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்றைய கூட்டத்தில், கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக முதல்வர் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு தரப்பினர் கருத்துகளை முன்வைத்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.