கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கத் தவறினால், ஜனநாயக நடைமுறைகளின் மீது தமிழர்கள் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களையும் நேற்று மாலை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவின் பின்னர் இராஜதந்திரிகள் சிலருடனும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் உரையாடியுள்ளேன்.
தமிழ் மக்கள் தந்துள்ள ஜனநாயகத் தீர்ப்பை மதிக்க வேண்டும்.
ஜனநாயகத் தீர்ப்பை உதாசீனம் செய்யாமல், மதித்து செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.
தேர்தலில் தவறுகள் இடம்பெறாதிருந்தால் 12 ஆசனங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கும் என்று இராஜதந்திரிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரிவித்தேன்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய கூட்டம் இன்று (நேற்று) கொழும்பில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படமாட்டாது என்று தெரிகிறது.
கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தங்கியுள்ளது.
ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
முதல் காலப்பகுதியில் முதல்வர் பதவியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவதற்கும் தயாராக இருக்கிறோம்.
எம் மக்களில் அநேகர் முதல்வர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்றும் மாகாண ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்கள்.
கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு ஆளும்தரப்பிற்கு இடமளிக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.