பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியை உருவாக்குவதற்கு அங்கத்துவ நாடுகளின் போதிய ஆதரவு இல்லையென்றும், இதனால் அந்த விடயம் நடைமுறைச் சாத்தியமற்றதென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் உச்சிமாநாடு கொழும்பில் நடைபெறுவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டார். சபாநாயகர் வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஆணையாளர் பதவி உருவாக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க வலியுறுத்தினார்.
"மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவதற்கான பொறிமுறை ஒன்று தேவை. பொதுநலவாய நாடுகள் அமைப்பு மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரைக் கொண்டிருப்பது அவசியம். உதாரணமாக அங்கத்துவ நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடந்தால் சர்வதேசம் தலையிட முன்னர் இந்த ஆணையாளர் அதனை ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஒரு நிலை இருக்கவேண்டும்'' என்றே ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவது தொடர்பில் கனடாவே முதலில் யோசனையை முன்வைத்ததென்றும், ஆனால் அதற்கு ஓரிரு நாடுகளே ஆதரவளித்தன என்றும் குறிப்பிட்டார்.
எனவே, பெரும்பான்மை தரப்புகளின் ஆதரவின்றி இவ்வாறான யோசனையொன்றை நிறைவேற்றிக்கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றதென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.