Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் இன்று; 108 பேர் தெரிவுக்கு 3073 பேர் களத்தில்!
Saturday 8th of September 2012 10:06:15 PM

 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய  மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 108 உறுப்பினர் தெரிவுக்காக 3,073 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். மூன்று மாகாணசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றாலும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தே  சர்வதேச நாடுகள் உட்பட அனைவரினதும் கவனமும் திரும்பியுள்ளது. இதனால் கிழக்குத் தேர்தல் ஒரு ஜனநாயகச் சமராக மாறியுள்ளது.

2011 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் இன்று நடைபெறுகின்ற தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் எனப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

மூன்று மாகாணங்களிலும் 3 ஆயிரத்து 247 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்களிப்பு இடம்பெறுகின்றது.  வாக்குகளை எண்ணுவதற்காக 236 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

3 மாகாணங்களில் 37  தொகுதிகளில் நடைபெறுகின்ற தேர்தலின் முடிவுகள் அந்தந்த தொகுதிவாரியாக அறிவிக்கப்படும். தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக 21 ஆயிரம்  பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேர்தலைக் கண்காணிப்பதற்காக 4 ஆயிரத்திற்கும் அதிகமான  கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று இலங்கை நேரம் காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை , இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது.

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்புடன் நேற்று எடுத்துச்செல்லப்பட்டது. 

தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரச ஊழியர்களும் நேற்றுமுதல் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பித்துள்ளனர்.

கடமையிலீடுபடுத்தப்படும் 21 ஆயிரம் பொலிஸாருள் 123 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும், ஆயிரத்து 400 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குகின்றனர். இவர்களுள் 70 பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் வாக்குச் சாவடிகளில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு சேவைகளை முன்னெடுக்கின்றனர். நான்கு வாக்குச் வாடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் சேவையும் செயற்படுகின்றது. இவ்விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை நாளைவரை தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமுலில் இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

மூன்று மாகாணத்திலும் இதுவரை அமைதியான சூழலே காணப்படுகின்றது எனத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பதற்றம் காணப்பட்ட போதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கென விசேட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

நடத்தப்படவிருக்கும் தேர்தலில் அநீதி ஏற்படாமையை உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கென தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து விசேட அதிகாரிகளடங்கிய குழுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதியானதும் அமைதியானதுமான முறையில் இன்று தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்து வந்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததும் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை இன்று நள்ளிரவு 12 மணியளவிலும் முழுமையான வாக்களிப்பினது முதலாவது பெறுபேற்றினை நாளை காலை 2 மணியளவிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என பிரதி ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

236 நிலையங்களில் வாக்குகள்  எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பவ்ரல், கபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, கண்காணிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 26 நிலையங்களிலும், அம்பாறையில் 29 நிலையங்களிலும், திருகோணமலையில் 19 நிலையங்களுமாக கிழக்கு மாகாணத்தில் 74 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அநுராதபுரத்தில் 42 நிலையங்களிலும், பொலன்னறுவையில் 23 நிலையங்களிலுமாக வடமத்திய மாகாணத்தில் 65 நிலையங்களிலும்,கேகாலையில் 47 நிலையங்களிலும் இரத்தினபுரியில் 50 நிலையங்களிலுமாக சப்ரகமுவ மாகாணத்தில் 97 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1162 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 414 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 11 உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்படவுள்ளனர். இங்கு 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேர்  வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளில்  463 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இங்கு 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.   இம் மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

திருகோணமலை மாவட்டத்தில் 285 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 10 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இங்கு 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

உத்தியோகப்பூர்வ தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடத்தப்பட்டதுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று மாகாண சபைகளும் ஜூன் 27 ஆம் திகதி கலைக்கப்பட்டன. ஜுலை 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark