தேர்தல்கள் நடைபெறவிருக்கும் 7 மாவட்டங்களிலும் களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மாணவர்கள் இக்கருத்துக் கணிப்பை நடத்தியதாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
நடைபெறவிருக்கும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில்,
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 59 வீதமான வாக்குகளும்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 15 வீதமான வாக்குகளும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 வீதமான வாக்குகளும்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு 8 வீதமான வாக்குகளும்,
ஜே.வி.பி.க்கு 2 வீதமான வாக்குகளும்,
ஏனைய கட்சிகளுக்கு 2 வீதமான வாக்குகளும் கிடைக்குமென கருத்துக்கணிப்பு முடிவுகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் நடைபெறவிருக்கும் 7 மாவட்டங்களிலும் 3500 பேரிடம் நேரடியாக இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 75 மாணவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இக்கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தனர்.
தாம் நடத்திய கருத்துக்கணிப்புக்கு அமைய கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்குகள் மூன்றாகப் பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஏனைய இரண்டு மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறினார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 33 சதவீதமான வாக்குகளும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 29 சதவீதமான வாக்குகளும்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு 21 சதவீதமான வாக்குகளும்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 10 சதவீதமான வாக்குகளும்,
ஜே.வி.பி.க்கு ஒரு வீதமான வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 88 சதவீதமான வாக்குகளும்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 24 சதவீதமான வாக்குகளும்,
ஜே.வி.பி.க்கு 2 சதவீதமான வாக்குகளும்.
முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு 4 சதவீதமான வாக்குகளும் கிடைக்குமென கருத்துக்கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 76 சதவீத வாக்குகளும்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 18 சதவீதமான வாக்குகளும்,
ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு சதவீதமான வாக்குகளும் கிடைக்குமென களனிப் பல்கலைக் கழகத்தின் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கெடுத்தவர்களில் 60 சதவீதமானவர்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை 9 சதவீதமானவர்களும், சஜித் பிரேமதாசவை 9 சதவீதம் முதல் 12 சதவீதமானவர்களும் செல்வாக்கு மிக்க தலைவர்களாகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.