சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தஞ்சாவூர் பூண்டி மாதா ஆலயத் திருவிழாவுக்காக சென்றிருந்த சிறிலங்காவைச் சேர்ந்த 184 சிங்களவர்களை வெளியேறக் கோரி, நேற்று நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றை அடுத்தே இந்தப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்த சிங்களவர்கள் உடனடியாக கொழும்பு திரும்பிவிட வேண்டும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து அவர்கள் தமது பயணத்தை இடைநிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்றுமாலை வெளியிட்ட பயண எச்சரிக்கைக் குறிப்பில் தமிழ்நாட்டுக்குச் செல்வதை மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா, தல யாத்திரை, விளையாட்டு, கலாசார செயற்பாடுகள், மற்றும் நிபுணத்துவ பயிற்சிகளுக்காக தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
அதேவேளை இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதில் எந்தத் தடைகளும் இல்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.