நாட்டை பிளவுபடுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரகசிய ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிக்கு ஆதரவளித்து, தனி முஸ்லிம் அலகொன்றை பெற்றுக்கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கின்றது.
இரு தரப்பிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக முஸ்லிம் வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக சிங்கள வாக்குகளைப் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றினால் முஸ்லிம் காங்கிரஸிற்கு தனி அலகு வழங்குவதற்கான முனைப்புக்களை தொடரும் என அந்த சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரு கட்சிகளுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அறிவித்துள்ளன.
இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளன.