மத்திய அரசின் கைப்பொம்மையாக கிழக்கு மாகாண சபை இருக்கக்கூடாது என்பதற்காகவே கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மூதூர் பிரதேசத்தின் இலங்கைத்துறை மற்றும் கங்குவேலி ஆகிய கிராமங்களில் நேற்றுக்காலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"மாகாண சபை முறைமை அந்தந்த மாகாண மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்திகளை நிறைவேற்றக்கூடிய ஓரளவு அதிகாரங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2008 தேர்தலில் தெரிவான கிழக்கு மாகாண சபையை மத்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தி வந்துள்ளது.
இனியும் மத்திய அரசு கிழக்கு மாகாணசபையை பயன்படுத்த அனுமதிக்கவிட முடியாது. இதற்காகவேதான் மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பை துண்டித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையின் ஆட்சி தெரிவு செய்த மக்களுக்காக சேவையாற்றவில்லை.
மத்திய அரசின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே மத்திய அரசின் கைப்பொம்மையாகவே பணியாற்றியது. இதனை இனியும் அனுமதிக்க்கூடாது என்ற காரணத்திற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போட்டியிடுகின்றது" - என்றார்.