"கிழக்கு மாகாணத்தில் மீண்டும் தான் முதலமைச்சராக வருவேன் என பிள்ளையான் பொய் சொல்லுகின்றார். முதலமைச்சராக ஆவதைவிட ஓர் உறுப்பினராகக்கூட அவரால் வரமுடியாது என்பதை நான் பகிரங்கமாக இந்த இடத்தில் தெரிவிக்கிறேன். அவர் பல்வேறு அடாவடித்தனங்களைக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மீது மேற்கொண்டு வருகின்றார். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம்."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர் சங்கம், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றை நடத்தியது.
இந்தக் கூட்டம் வடக்கு, கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர் சங்கத்தின் கிழக்கு மாகாண அமைப்பாளர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவை வருமாறு:
"திருகோணமலை மாவட்டம் ஒரு சிக்கல் நிறைந்த மாவட்டம். தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்த இந்த மாவட்டத்தில் 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இன்று இனவிகிதாசாரத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூன்று இனமும் சமமாகக் காணப்படும் மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகிறது. இது எப்படி ஏற்பட்டது என்பது வரலாறாக இருக்கட்டும். அன்று தொடக்கம் இன்றுவரை திட்டமிட்ட குடியேற்றங்கள் கிழக்கில் நடைபெறுகின்றன.
அதிகாரப்பகிர்வு பதின்மூன்றாம் அரசியல் அதிகாரத்தின்படி பொலிஸ், காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம் அதிகாரம் பெறக்கூடிய வாய்ப்பை கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றுவதன் மூலம் ஏற்படுத்தலாம்.
அரசு அபிவிருத்தி பற்றி கதைத்துக்கொண்டிருக்கின்றது. திருகோணமலை - மட்டக்களப்புக்கிடையே ஐந்து பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் இப்படிப்பட்ட அபிவிருத்திகளை செய்யமுடியுமா என அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மாநாட்டில் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருந்தார். உண்மையில் இந்தப் பாலங்கள் பிரான்ஸ் அரசின் நிதியில் கட்டப்பட்டவை. மஹிந்த அரசின் பணத்தில் செய்த அபிவிருத்தியை பட்டியலிட முடியுமா என நான் பஸில் ராஜபக்ஷவிடம் கேட்க விரும்புகின்றேன்.
சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எமது இளைஞர்கள் சிறையில் அடித்துக் கொலை செய்யப்படுகின்றனர். இப்படியான அரசுக்கு எப்படி தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்? இது முடியாத காரியம்.
கிழக்கு மாகாணத்தில் மீண்டும் தான் முதலமைச்சராக வருவேன் என பிள்ளையான் பொய் சொல்லுகின்றார். முதலமைச்சராக ஆவதைவிட ஓர் உறுப்பினராகக்கூட அவரால் வரமுடியாது என்பதை நான் பகிரங்கமாக இந்த இடத்தில் தெரிவிக்கிறேன். அவர் பல்வேறு அடாவடித்தனங்களைக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மீது மேற்கொண்டு வருகின்றார். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம்" - என்றார்.