யாழ்ப்பாணத்தை மட்டும் கிட்டத்தட்ட நாற்பதினாயிரம் படையினர் சூழ்ந்திருக்கிறார்கள். சில இடங்களில் படையினர் மட்டும் தான் இருக்கிறனர். நாங்கள் அச்சத்தோடு வாழ்கிறோம். சில இடங்களில் திடீர்ச் சோதனைகள் நடத்தப்படுகின்றன என யாழ். மறை மாவட்ட ஆயார் வண. தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு தமிழர் பகுதிகளிலிருந்து படையினர் போருக்குப் பின்னர் குறைக்கப்படு மீண்டும் தத்தம் இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. படையினர் மேலும் அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர் பகுதிகளில் படைக் குறைப்பு மிகவும் அவசியம் என்பதை நாங்கள் அரசாங்கத்துக்குச் சொல்லியுமிருக்கிறோம். இப்படிச் சொல்லும்போது இன்னும் பயங்கரவாத ஆபத்து இருப்பதால் படைக் குறைக்க முடியாது என்று அரசாங்கம் சொல்கிறது. அது மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னிப் பிரதேசங்களில் இந்த நிலைமை கடுமையாக இருக்கிறது. புலிகள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் படையினர் மத்தியில் இருக்கிறது. சில இடங்களில் மீன்பிடிக்கக் கூடத் தமிழர்களை படையினர் அனுமதிப்பதில்லை.
ஆனால் சிங்கள மீனவர்கள் படையினர் உதவியோடு மீன்பிடிக்கிறார்கள். அது தமிழ் மக்கள் மத்தியில் கசப்பான விடயமாகும். எப்படி வாழ்வது என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது.
படையினருடன் நாம் போய்க் கதைப்போம். ஆனால் சில விடயங்களைத் தங்களால் எதுவும் செய்ய முடியாது ஏனெனில் அது மேலிட உத்தரவு என்று சொல்வார்கள். பிரச்சினை என்னவெனில் அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை என்ன சொல்கிறதோ அதன்படி அவர்கள் நடப்பதாகத் தெரிகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.