கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் குறித்து தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று, கொலன்னாவவில் இடம்பெற்ற துப்பாக்சிச் சூட்டுச்சம்பவத்தில் சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த துமிந்த சில்வா சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திரவை துமிந்த சில்வாவே சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்த வழக்கில் துமிந்த சில்வாவிடம் விசாரணை நடத்தி அவரது சாட்சியத்தை பெறுமாறு சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சிறிலங்கா நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவு உதவி கண்காணிப்பாளர் சானி அபேசேகர, நீதிமன்றத்தில் முன்னிலையாகி துமிந்த சில்வாவிடம் நடத்திய விசாரணை குறித்து சாட்சியமளித்தார்.
அப்போதே, கொலன்னாவ சம்பவம் தொடர்பான தனக்கு எதுவுமே நினைவில் இல்லை என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் நாள் சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் துமிந்த சில்வாவை சந்தித்து தாம் வாக்குமூலம் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.