Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

கிரானைட் கொள்ளையை விசாரிக்கும் சகாயம் குழுவை முடக்க தமிழக அரசு முயற்சி

Tuesday 12th Sep 2017 07:58 AM

Tamil Nadu government trying to disrupt grant-fraud inquiry team: Dhammani Ramadoss

இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரி சகாயம் தலைமையிலான கிரானைட் கொள்ளை விசாரணைக் குழுவை முடக்க தமிழக அரசுமுயற்சிக்கிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி செயளாளர் அன்புமணி ராமதாஸ் இன்று (செப்டம்பர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

“தமிழ்நாட்டையே உலுக்கிய கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு கால தாமதம் செய்வது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை சூறையாடிய கிரானைட் கொள்ளையர்களை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களை பாதுகாக்க ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

கிரானைட் கொள்ளை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் அரசுக்கு அறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து, கிரானைட் கொள்ளை குறித்து சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என பாமகதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்காமல் தமிழக அரசு தாமதப்படுத்திய போதும் அதை எதிர்த்து பாமக போராடியது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு விசாரணையை தொடங்கிய சகாயம் குழு, சுமார் ஓராண்டு விசாரணைக்குப் பிறகு அதன் விசாரணை அறிக்கையை 23.11.2015 சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

சகாயம் குழு அறிக்கையின் படி மதுரை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் கிரானைட் கொள்ளையால், ரூ.62,890.91 கோடி, அரசுக்கு சொந்தமான டாமின் நிறுவனத்தின் முறைகேடுகளால் ரூ.5507.53 கோடி, தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதம் ரூ.34,304.13 கோடி, டாமின் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதம் ரூ.9978.99 கோடி என மொத்தம் ரூ.1,12,681.56 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சகாயம் குழு மதிப்பிட்டிருக்கிறது. அதேநேரத்தில் இது உத்தேச மதிப்பீடுதான். துல்லியமான மதிப்பீடு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் அதுகுறித்து சிபிஐயின் பல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தும்படி சகாயம் குழு பரிந்துரைத்துள்ளது.

திமுக, அதிமுக ஆதரவு நிறுவனங்களால் கிரானைட் கொள்ளைக்காக மதுரை மாவட்டத்தின் வரைபடமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சமணர் படுக்கை அமைந்த மலைகள் சிதைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சீர்கேடுகளைத் தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களோ கிரானைட் கொள்ளையர்களுக்கு சேவகம் செய்து வருகின்றனர்.

மேலூர் வட்டத்தில் மட்டும் கிரானைட் கொள்ளை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று சகாயம் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அதன் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தமிழக அரசின் பட்ஜெட்டைவிட 3 மடங்கு அதிகம். இதற்கு காரணமானவர்களை தண்டித்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யாமல் இருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம். அதைத்தான் ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

மேலூர் வட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளைகள் தொடர்பாக 180 வழக்குகள் தொடரப்பட்டு மேலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய 98 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவ்வழக்குகளை விசாரிக்க மேலூர் நடுவர்மன்ற நீதிபதி மகேந்திர பூபதி மறுத்துவிட்டார். மேலும், இரு வழக்குகளில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது பொய்வழக்கு தொடர்ந்ததாக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார்.

இவை அனைத்துமே ஆட்சியாளர்களின் துணையுடன் நடந்தவை. இது குறித்து தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், சில தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்வதை தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது. இதுவும் கிரானைட் கொள்ளையரை பாதுகாக்கும் செயல்தான்.

கிரானைட் கொள்ளை குறித்து சகாயம் குழு தனது விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. இருப்பினும், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அறிக்கை மீது தமிழக அரசு எத்தகைய விசாரணை நடத்தப் போகிறது என விளக்கம் கேட்டு நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் தமிழக அரசு பதிலளிக்கவில்லை. இது கிரானைட் கொள்ளையர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை.

கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்கும் சகாயம் குழுவை முடக்கும் செயலிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதனால், சகாயம் குழுவின் பதவிக்காலம் வரும் 14 ஆம் தேதியுடன் முடித்து வைக்கப்படுகிறது. மேலூர் வட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை தொடங்காத நிலையில் சகாயம் குழுவை கலைப்பது முறையல்ல. மேலும், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்தும் விசாரிக்க வேண்டியிருப்பதால், சகாயம் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும். கிரானைட் கொள்ளை குறித்து உடனடியாக சிபிஐ தலைமையில் பல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.