Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

இந்தியாவில் உள்ள 14 போலி சாமியார்கள் பட்டியல்: சாதுக்கள் சபை வெளியிட்டது!

Tuesday 12th Sep 2017 07:50 AM

List of 14 fake preachers in India: Sadhus council issued

இந்தியாவில் உள்ள இந்து மத சாதுக்களின் உயரிய சபையாகக் கருதப்படும் அகாடா பரிஷத் (சாதுக்கள் சபை) குருமித் சிங் ராம் ரஹீம், ஆசாராம் பாபு உட்பட 14 பேரை போலி சாமியார்கள் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உருவாகி பிரபலமாகிவிட்ட ‘வாழும் சாமியார்கள்’ பலரின் மீது பாலியல், கொலை உட்பட பல்வேறு வகை வழக்குகள் பதிவாகி நடந்து வருகின்றன. இதில், முதல் நபராக ஹரியானாவின் தேரா சச்சா சவுதாவின் மடாதிபதியான குருமித் சிங் ராம் ரஹீம் பாலியல் வழக்கில் சிக்கி 20 வருட சிறை தண்டனை பெற்றார். இதனால், அவரது லட்சக்கணக்கான சீடர்களுக்கு தலைகுனிவு நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு சாதுக்கள் பொதுமக்கள் இடையே கடும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாக முதன்முறையாக சாதுக்கள் சபையினர் நேற்று உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கூடி ஆலோசனை செய்தனர். இதன் தலைவரான மஹந்த் நரேந்தர கிரி தலைமையில் 13 அகாடாக்களின் 26 சாதுக்கள் அதில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மஹந்த் நரேந்தர் கிரி, “நாம் அறிவித்துள்ள 14 போலி சாதுக்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவர்களுக்கு கும்ப மேளா, மஹா கும்பமேளா மற்றும் ஆன்மீகக் கூட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான அங்கீகாரமும் அளிக்கக் கூடாது. அவர்களுக்கு மற்ற சாதுக்களுடன் இடங்களையும் அரசுகள் ஒதுக்க கூடாது. இவர்கள் பட்டியலை தகவலுக்காக வேண்டி 4 சங்கராச்சாரியர்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் 13 அகாடாக்களுக்கும் புறக்கணிக்க வேண்டி அனுப்பி வைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அகாடாக்களின் தலைமை அமைப்பான சாதுக்கள் சபை வெளியிட்டுள்ள போலி சாதுக்கள் பட்டியலில் குருமித் சிங் ராம் ரஹீமின் பெயர் முதலாவதாக இடம்பெற்றுள்ளது. அடுத்து பாலியல் வல்லுறவு உட்பட பல வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் 76 வயதான ஆசாராம் பாபுவின் பெயரும் உள்ளது.

அசுமல் சிருமாளனி , நாராயண், சாய் ராதே மா, சச்சின் தத்தா ஆகியோர் பெயரும் போலி சாதுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அசுமல் சிருமாளனி எனும் சாமியார் பாகிஸ்தானில் பிறந்தவர். இவருக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆசிரமம் உள்ளது. இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான சீடர்களுடன் கோடிக்கணக்கான சொத்துக்களும் உள்ளன. இவர் பெயரும், இவரைப் போல் பல்வேறு கொலை வழக்குகளும் சிக்கியுள்ள இவருடைய மகனான நாராயண் பெயரும் போலி சாதுகள் பட்டியலில் உள்ளது.

சாய் ராதே மா என அழைக்கப்படும் சுக்வீந்த்ர் கவுர் எனும் பெண் சாதுவின் பெயரும் பட்டியலில் உள்ளது. மும்பையில் வாழும் ராதே மா மீது மோசடி, மானநஷ்ட ஈடு உட்படப் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

சச்சின் தத்தா எனும் சச்சினாந்தா நொய்டாவின் சாது ஆவார். ‘பில்டர் பாபா’ என அழைக்கப்படும் இவர் மீது வங்கிக்கடன், அடுக்கு மாடி வீடுகள் மோசடி உட்படப் பலவேறு வழக்குகள் காஜியாபாத் பொருளாதார குற்றப்பிரிவில் பதிவாகி நடைபெற்று வருகின்றன.

இவர்கள் தவிர மகராட்டிராவின் அஜ்மீர் தர்கா மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புகள் வழக்கில் சிக்கி அப்ரூவரான சுவாமி அசீமானந்தா, உத்தரபிரதேசத்தின் பிரஹஸ்பதி கிரி, ஹரியானாவின் ராம்பால், மகராட்டிராவின் இச்சாதரி பீமானந்த், ஜார்கண்டின் நிர்மல் பாபா, டெல்லியின் சுவாமி ஓம்ஜி மற்றும் ஆச்சார்யா குஷ்முனி ஆகியோர் பெயர்களும் போலிகளாக இடம் பெற்றுள்ளன.