Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

கே.பி.சுந்தராம்பாள்

Wednesday 13th Sep 2017 21:55 PM

ஜெயலலிதாவுடன் கந்தன் கருணை

கே.பி.சுந்தராம்பாள்

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் நம் மனதில் நிற்பவர் சிவாஜி கணேசன், அதுபோல ஒளவையார் என்றால் நம் மனதில் நிற்பவர் கே.பி.சுந்தராம்பாள். தமிழ் சினிமாவில் நடிப்பால் புகழ் பெற்றதைவிட, குரலால் புகழ் பெற்றவர் கே.பி.சுந்தராம்பாள்.கோயம்புத்தூர் மாவட்டம்(இப்போதைய ஈரோடு மாவட்டம்) கொடுமுடியில் 11.10.1908 இல் பாலாம்பாளின் புதல்வியாக பிறந்தார் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (கொ.பா.சுந்தராம்பாள் ஓ.ட.சுந்தராம்பாள்). சுந்தராம்பாள் தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். அப்பொழுது இவர் குடும்பம் வறுமையில் தவித்தது. அதனால் இவரால் நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள். சுந்தராம்பாளையும் அவரது தம்பிகள் மூவரையும் தங்கை ஒருவரையும் அவரது தாயார் பாலாம்பாளையும், சுந்தராம்பாளின் தாய்மாமன் மலைக்கொழுந்து கவுண்டர் ஆதரித்து வந்தார். சுந்தராம்பாள் நாடக உலகில் புகழ்பெற்று நடித்துக் கொண்டிருந்த போது, இந்த தாய்மாமன்தான் சுந்தராம்பாளுக்கு உதவியாளராக இருந்தார். சுந்தராம்பாளுடன் அவரது பாட்டி செளந்தராம்பாளும் வசித்ததுடன், சுந்தராம்பாள் நாடகத்திற்காக வெளியூர் செல்லும் போது அவருடன் துணையாக செல்வார். ஐந்து வயதிலேயே இவருடைய குரலும் பாடக்கூடிய திறமையும் இவரின் ஊரில் பரவியிருந்தது. அதனால் ஊர் மக்கள் கோவில் வைபவங்களில் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்பளித்தனர். இவரின் பத்தாவது வயதில் வேலு நாயர் நாடக கம்பெனியில் நடித்தார். கே.பி.எஸ். நாடகத்தில் ஆண்வேடங்களில் (ராஜபார்ட்) நடிக்கும் போது பல பிரபல நாடக நடிகைகள் இவருக்கு ஜோடியாக (ஸ்திரீ பார்ட்டில்) நடிப்பார்கள். அப்படி நடித்தவர்களில் ஒருவர்தான் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியான டி.பி.ராஜலக்ஷ்மி.சுந்தராம்பாள் பின்பு நாடகங்களில் பெண் வேடங்களிலேயே நடித்தபோது, இவருடன் நடித்த நடிகர்கள் இவருடைய நடிப்புக்கும் குறிப்பாக குரலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் இரண்டு மூன்று நாட்களிலேயே சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவிடுவார்களாம். இவருக்கு ஈடுகோடுக்கும்படி கிட்டினார் கிட்டப்பா. சுந்தராம்பாள் கிட்டப்பா ஜோடி இலங்கையில் நடந்த நாடகங்களில் பிரபலமானார்கள். நாடகத்தில் இணைந்த சுந்தராம்பாளை, கிட்டப்பா தனது வாழ்க்கையிலும் இணைத்துக் கொண்டார், இளையதாரமாக. 1927இல் இருவரும் மாயவரத்தில் மாலை மாற்றி கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். 1928 இல் இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே இறந்து விட்டது. 1934 இல் கிட்டப்பா இறந்து விட்டார். கிட்டப்பாவை இவர் மணந்து 7 ஆண்டுகளில் இறந்தாலும், கிட்டப்பாவுடன் கே.பி.எஸ். வாழ்ந்தது 3 ஆண்டுகள்தான். 27 வயதில் விதவையான இந்த காவிய காதலி தன்வாழ்நாள் முழுதும் ஒரு தூய துறவிபோல் வாழ்ந்து வந்தார்.சினிமா நாடகங்களில் நடித்ததுடன் கோவில்களில் பாடினார், தேசத்திற்காக பாடினார், இசைத் தட்டில் பாடினார். கே.பி.எஸ். ஆல் கட்டப்பட்டு எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட கே.பி.எஸ். திரையரங்கம் இன்றும் இவரின் உறவினர்களால் கொடுமுடியில் நிர்வகித்து வரப்படுகிறது. கே.பி.எஸ். போலவே டி.ஆர்.ராஜகுமாரி, சிவாஜி, நாகேஷ் ஆகியோரும் திரையரங்க உரிமையாளர்கள் என்பதை இங்கு நினைவு கொள்வோம். துணைவன் படத்தில் பாடியதற்காக 1969 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகி விருதை மத்திய அரசு இவருக்கு அளித்தது. ஏழிசை வல்லபி என்று போற்றப்பட்டவர் இவர். தமிழக அரசின் மேல் சபையில் எம்.எல்.சி. பதவியும் வகித்தார். தீரர் சத்தியமூர்த்தியை கே.பி.எஸ். தன் உடன்பிறவா அண்ணாராக மதித்துவந்தார். தீரர் வாடகை வீட்டிலிருந்த நிலையைக் கண்டு வருந்தினார் கே.பி.எஸ். அதனால் சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபாவுக்கு முன்புறம் இருந்த தனது நாலரை கிரவுண்ட் மனையை தீரர் பெயரில் எழுதி வைத்தார் கே.பி.எஸ். ஒளவையார் படம் பார்த்தவுடன் சுந்தராம்பாளை சந்தித்துப் பாராட்டினார் இந்திப் பாடகி லதா மங்கேஷ்கர்.கே.பி.சுந்தராம்பாள் நடித்த படங்கள்கே.பி.சுந்தராம்பாள் நடித்த 13 படங்களில் ஞாயிறும் திங்களும் என்ற படம் மட்டும் திரைக்கு வரவில்லை. இந்த ஒரு படம் போக 12 படங்களில் இவர் நடித்துள்ளார். 1935 இல் நந்தனார் படத்தில் நடித்த பின்பு 5 ஆண்டுகள் கழித்து, பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை என்ற படத்தில் நடித்தார். அடுத்து 13 ஆண்டுகள் இடைவெளி விட்டு ஒளவையார் படத்தில் நடித்தார். அடுத்தும் 10 ஆண்டுகள் கழித்து பூம்புகார் படத்தில் நடித்தார். இவர் நடித்த படங்களில் ஒளவையார், திருவிளையாடல் ஆகிய 2 படங்களும் 175 தினங்களுக்கு திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாயின. கந்தன் கருணை, துணைவன் ஆகிய இரு படங்களும் 100 தினங்களுக்கு திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாயின. இவர் நடித்த 12 படங்களில் திருவிளையாடல், கந்தன் கருணை, திருமலை தெய்வம், சக்தி லீலை, காரைக்காலம்மையார் ஆகிய 5 படங்கள் வண்ணப் படங்கள். துணைவன் படத்தின் கடைசிக் காட்சிகள் வண்ணத்தில் உள்ளது. மீதி நந்தனார், பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை, ஒளவையார், பூம்புகார், மகாகவி காளிதாஸ், உயிர்மேல் ஆசை - ஆகிய 6 படங்களும் கருப்பு வெள்ளை படங்கள். துணைவன், உயிர்மேல் ஆசை ஆகிய இரு படங்களும் சமூக கதையைக் கொண்ட படங்கள். மற்ற 10 படங்களும் காவிய புராண பக்திப் படங்களாகும். ஒளவையார், திருவிளையாடல், கந்தன் கருணை ஆகிய 3 படங்களில் ஒளவையாராக நடித்துள்ளார். பக்த நந்தனார், பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை, காரைக்காலம்மையார் - ஆகிய படங்களில் முறையே படத்தின் தலைப்பு பாத்திரங்களான நந்தனார், மணிமேகலை, காரைக்காலம்மையார் ஆகிய வேடங்களில் நடித்துள்ளார். பூம்புகார் படத்தில் கெளந்தியடிகள் வேடத்திலும், மகாகவி காளிதாஸ் படத்தில் மாற்று ரூபங்கொண்ட காளிதேவியாகவும், துணைவன் படத்தில் முருக பக்தையாகவும், உயிர்மேல் ஆசை படத்தில் தாயாகவும் - இவர் நடித்துள்ளார். 1933 இல் ஒரு நந்தனார் படமும், 1942 இல் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் படமும் திரைக்கு வந்தன. 1935 இல் கே.பி.சுந்தராம்பாள் நடித்த பக்த நந்தனார் படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் இவர் நந்தனாராக ஆண் வேடத்தில் நடித்தது விமர்சனத்திற்குள்ளானது. இவரைப் போலவே குசேலா படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி கிருஷ்ணன் வேடத்திலும், சாவித்திரி படத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நாரதராகவும் ஆண் வேடங்களில் நடித்தனர். பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை படத்தில், பால வயதிலேயே சந்யாசினி ஆகிவிட்ட மணிமேகலை பாத்திரத்தில் நடித்தார் கே.பி.ஏஸ். நாயகன் உதயணனாக நடித்தவர் கொத்தமங்களம் சீனு. நாயகனின் தோழன் சொக்கனாக நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. வீரப்பா அறிமுகமானது இந்தப்படத்தின் மூலமாகத்தான். வீரப்பாவும் கே.பி.எஸ்ஸூம் (அப்பொழுதைய) ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோவில் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைக் கொண்ட ஞாயிறும் திங்களும் படம் திரைக்கு வராத படப்பட்டியலில் இணைந்து விட்டது. முழுவதும் முடிந்த நிலையில், இப்படத்தின் சில இறுதிக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவில்லை. தேவிகா ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக நடித்திருப்பார். இப்படத்தின் கதை தினமணிக் கதிர் இதழில் பிரசுரமாகியுள்ளது. ஞாயிறும் திங்களும் சேர்ந்தால் அமாவாசைதான் வரும். பெளர்ணமி போல் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டிய இப்படம், அமாவாசை போலாகிவிட்டது. நாயகனை (சிவாஜியை) காதலிக்கும் நாயகி (தேவிகா) ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனை. கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக நாயகி டோக்கியோ செல்கிறாள். அது சமயம் நாயகியின் பணக்கார தாய் (கே.பி.சுந்தராம்பாள்) ஏழை நாயகனை மகனாக ஸ்வீகாரம் எடுக்கிறாள். நாயகனுக்கும் தன்னை தத்து எடுப்பது நாயகியின் தாய் எனத் தெரியாது. டோக்கியோவிலிருந்து திரும்பிய நாயகி அனைத்தும் அறிந்து வேதனைப் படுகிறாள். வாழ்வை வெறுத்த நாயகி கிருத்துவ மதத் தொண்டுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள். இரு மலர்கள் படத்தில் பத்மினியை காதலித்த சிவாஜி விதி வசத்தால் கே.ஆர்.விஜயாவை மணப்பது போலவே, இந்தப் படத்திலும் தேவிகாவை காதலித்த சிவாஜி கே.ஆர். விஜயாவை மணக்கிறார். நாயகனின் தந்தையாக வி.கே.ராமசாமியும் நாயகனின் தங்கையை மணப்பவராக முத்துராமனும் நடித்தனர். பக்தி, சோகம், தத்துவம் அறிவுரை என்ற எல்லைகளுக்குள்ளேயே இவர் பாடிய பாடகள் அமைந்துள்ளன. இவர் பாடிய 58 பாடல்களில் (ஒரு பாடல் தவிர) அனைத்து பாடல்களையும் இவர் தனித்தே பாடியுள்ளது ஒரு சிறப்பம்சம்.கே.பி.சுந்தராம்பாளின் புகழ்பெற்ற பாடல்களில் சிலபொறுமையெனும் நகையணிந்து - ஒளவையார்முத்தமிழ் தெய்வமே வா- ஒளவையார் வள்ளுவர் தந்த குறள்- ஒளவையார் (ஒருவனுக்கு ஒருத்தி) வாழ்க்கை எனும் ஓடம் - பூம்புகார் (பவளமணி மாளிகையில்) தப்பித்து வந்தானம்மா -பூம்புகார் பழம் நீயப்பா தமிழ்ஞான -திருவிளையாடல் சென்றுவா மகனே -மகாகவி காளிதாஸ் கேளு பாப்பா கேளு பாப்பா - உயிர்மேல் ஆசை என்றும் புதியது - கந்தன் கருணை கூப்பிட்ட குரலுக்கு யார்வந்தது - துணைவன் (ஓடுங்கால் ஓடி) தக தகவென - காரைக்காலம்மையார் ஏழு மலையிருக்க நமக்கென்ன - திருமலை தெய்வம் இவர் இரு முதல்வர்களுடன் கலைப் பணியாற்றியுள்ளார். மு. கருணாநிதி வசனம் எழுதிய பூம்புகார் படத்தில் கே.பி.எஸ். நடித்துள்ளார். ஜெயலலிதாவுடன் கந்தன் கருணை, சக்தி லீலை ஆகிய இரு படங்களில் கே.பி.எஸ். நடித்துள்ளார். தமிழ்த் திரையின் பிரபலமான நான்கு வேந்தர்களாளில் எம்.ஜி.ஆர். தவிர, மற்ற மூன்று நாயகர்களான சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோருடன் இவர் நடித்துள்ளார்.கே.பி.எஸ். பட இயக்குநர்கள் ஏ.பி.நாகராஜன் - திருவிளையாடல், கந்தன் கருணை, காரைக்காலம்மையார், திருமலை தெய்வம்கொத்தமங்கலம் சுப்பு -ஒளவையார் பொம்மன் இரானி -பாலசந்யாசினி (அல்லது) மணிமேகலைப.நீலகண்டன் - பூம்புகார் எம்.ஏ.திருமுகம் - துணைவன் ஆர்.ஆர்.சந்திரன் - மகாகவி காளிதாஸ்ஜம்பு -உயிர்மேல் ஆசை எந்த பாடகருடனும் சேர்ந்து பாடாமல் தனித்து பாடியவர்கள் கே.பி.சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள் ஆகிய இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி.எஸ். 24.09.1980 இல் முருகனடி சேர்ந்தார்.