Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

தென்னமரவாடி மறுவாழ்வுத் திட்டத்திற்கு 85,000 கனடிய டொலர்கள் திரட்டப்பட்டது.

Tuesday 12th Sep 2017 20:43 PM

நடைபவனி மூலம்

 

 

 

யுத்தத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தென்னமரவடி கிராமத்து மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் நோக்கோடும் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் வலுத்தர வைக்கும் இலக்கோடும் செப்டெம்பர் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நடத்தப்பட்ட கனடியத் தமிழர் பேரவையின் 9வது வருடாந்த நிதிசேர் நடையில் பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள், கனடிய, இலங்கை அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நடைபவனியில் கலந்து கொண்ட டொரண்டோ மேயர் ஜோன் ரோறி தமிழ்க் கனடியர்கள் குறித்து விதந்துரைத்தார். தமிழ்ச் சமூகம் ஒரு சிறு சமூகமாக கனடாவில் இருந்தாலும், அதன் சமூக அரசியல் பங்களிப்பு மிகப் பெரியது என அவர் குறிப்பிட்டார். ஒன்ராறியோ கல்வி அமைச்சர் மிட்சி ஹன்ரர் பேசும்போது கனடியத் தமிழ்ச்சமூகம் நிதிசேர் நடைபவனி மூலம் செய்துவரும் சமூக சேவையைப் பெரிதும் பாராட்டினார். இந்த நிதிசேர் நடையில் இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களும், வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம்  அவர்களும், வடக்கு மாகாணசபை கவுன்சிலரான இம்மானுவேல் ஆர்னோல்ட் அவர்களும் கலந்து கொண்டார்கள். ஸ்காபரோ ரூஜ்பார்க் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியும் அனைவருடனும் இணைந்து நடைபவனியில் கலந்து கொண்டதுடன் திட்டம் வெற்றிபெற வாழ்த்தினார். 

 

“இந்த நிதிசேர் நடையின்மூலம் தென்னமரவாடி மறுவாழ்வுத் திட்டத்திற்கு 85,000 கனடிய டொலர்கள் திரட்டப்பட்டுள்ளது.   இலக்கு 100,000 கனடிய டொலர்கள் ஆகும். திட்டத்திற்கு உதவ விரும்புவோர் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து செய்யலாம். திரட்டப்பட்ட பணம் மூலம் தென்னமரவாடியில் கால்நடை வளர்ப்பு, தென்னைப் பயிர்ச்செய்கை, ஊடு பயிர்ச்செய்கை ஆகியன ஒன்றிணைந்த பண்ணை ஒன்று அமைக்கப்படும்” என தென்னமரவாடித் திட்டத்தின் 9வது நடைபவனிக்கான இணைப்பாளரான பிரகல் திரு தெரிவித்தார். நடைபவனியில் கலந்து கொண்ட, பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் கனடியத் தமி்ழர் பேரவையின் தலைவர் டாக்டர் சாந்தகுமார் நன்றி தெரிவித்தார்.